கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் வெங்கடாம்பேட்டை சாலையில் வசிப்பவர் செல்வராஜ்(48). இவரது மனைவி சாவித்திரி(45). இவர்களுக்கு ஆனந்தராஜ் என்ற மகன் உட்பட 3 மகன்கள் உள்ளனர். செல்வராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அதேபோல் அவரது இளைய மகன் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் அவரது மூத்த மகன், நடு மகன் ஆனந்தராஜ், சாவித்திரி ஆகிய மூவர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி மூத்த மகன் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று உள்ளார். அன்றிரவு சாவித்திரி மற்றும் ஆனந்தராஜ் இருவரும் இரவு உணவு முடித்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, அவர்களின் வீட்டு ஓடு பிரிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட சாவித்திரி பதறியுள்ளார். மேலும், வீட்டு பீரோவைப் பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த சாவித்திரி, கச்சராபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் வெளியில் இருந்து ஆட்கள் உள்ளே புகுந்ததற்கான தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்து நின்றுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு சாவித்திரியின் நடு மகன் ஆனந்தராஜ் மீது சந்தேகம் எழுந்தது. அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்ததுள்ளனர். அப்போது அவர், திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் மறைத்து வைத்திருந்த 3 லட்சத்து 90 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.