மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தலையை சிதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மயிலாடுதுறை நகரத்தின் மையப் பகுதியில் உள்ளது கலைஞர் காலனி. அந்த பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். 20ம் தேதி இரவு மயிலாடுதுறை பெருமாள் கோயில் தெற்குவீதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் உறவினர் சரவணனோடு தனது வளர்ப்பு நாயுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை முழுவதும் சிதைந்து போன நிலையில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற சரவணன் கையில் வெட்டுக் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து ஒரு வீட்டிற்குள் புகுந்து கொல்லைப்புறமாகச் சென்று இருட்டில் பதுங்கியுள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சரவணனை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்த அஜித்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், "கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறை நகரத்தில் பாமக பிரமுகரான கண்ணன் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் அஜித்குமாரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்போது ஜாதி மோதல் ஏற்படாமல் தடுக்க அஜித்குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வசிக்கும் கலைஞர் காலனி பகுதிக்கு பல மாதங்களாக காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கண்ணனின் கொலைக்குப் பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம். படுகொலை காரணமாக மேலும் மோதல்கள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம்" என்கிறார்கள்.
இந்நிலையில், அஜித்குமாரின் உறவினர்கள் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பேருந்துகள் மாற்றி விடப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்து மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வருவதை தடை செய்த போலீசார், புறநகர் பகுதி வழியாகப் பேருந்தை மாற்றிவிட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு எட்டப்படாமல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் மயிலாடுதுறை நகரமே பதற்றமான சூழ்நிலையில் தகிக்கிறது.