யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் 71 குழந்தைகள் மரணம் அடைந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆறு நாட்களில் 71 பச்சிளங் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர் என்னும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கிவந்த நிறுவனத்துக்கு உத்தரப்பிரதேச அரசாங்கம் வழங்கவேண்டிய தொகையில் 67 லட்ச ரூபாய் நிலுவையில் இருந்துள்ளது. அதைக் கொடுக்கும்படி பலமுறை அந்நிறுவனம் வலியுறுத்தியும் உபி அரசால் அத்தொகை வழங்கப்படவில்லை. எனவே, அந்நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்குவதை நிறுத்தியுள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என்பதையும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதையும் அந்த மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு எடுத்துச்சொல்லியும் பலன் இல்லை. அதன் தொடர்ச்சியாகவே கடந்த 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களில் 71 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்தச் செய்தி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்னரும் கூட கடந்த சனிக்கிழமை மட்டும் 11 குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆதித்யநாத் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அளவுக்கு நிர்வாகத் திறமையற்ற ஒரு அரசாங்கம் இந்தியாவில் வேறு எங்குமே இருந்திருக்காது. பச்சிளங்குழந்தைகளின் மரணத்துக்கு முதலமைச்சர் என்ற முறையில் ஆதித்யநாத் அவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்.
கடந்த 1998 ஆம் ஆண்டுமுதல் 2017 வரை கோரக்பூர் மக்களவை தொகுதியின் எம்.பி ஆக இருந்தவர் ஆதித்யநாத். அவர்தான் இப்போது முதலமைச்சர். அந்தத் தொகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இப்படியொரு துயரம் நடந்திருப்பதற்கு வேறு எவரையும் குறைசொல்ல முடியாது.
ஆதியநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அம்மாநில அரசின் நிதிநிலையில் ஒதுக்கப்பட்டுவந்த நிதியின் அளவைக் குறைத்துவிட்டார். அவருக்கு முன் ஆட்சி நடத்திய அகிலேஷ் யாதவ் 2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் ஒதுக்கியிருந்த தொகையைவிட 36 கோடி ரூபாய் குறைவாகவே சுகாதாரத்துக்கு ஆதித்யநாத் ஒதுக்கியுள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைக் குறைத்துவிட்டு பசு பாதுகாப்புக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். பசுவைக் காப்பதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடாவது சிசுவைக் காப்பாற்றுவதில் அவர் காட்டியிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காது. இந்த துயரச் சம்பவத்திற்கு முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய உபி அரசு அம்மருத்துவமனையின் முதல்வரை மட்டும் பணியிடைநீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது.
கோரக்பூர் கோர மரணங்கள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் நிர்வாகத் திறமை இல்லாதவர் என்பதை அம்பலமாக்கிவிட்டன. அவர் முதலமைச்சர் பதவியில் தொடர்வது இன்னும் பல மரணங்களுக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.