வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி கிராமத்தில் கடந்த 6.08.1980ம் ஆண்டில் அப்பகுதியில் வலம் வந்த நக்சலைட்டான சிவலிங்கம் உள்பட 4 பேரை அப்போதைய ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிசாமி மற்றும் காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களை கைது செய்து கடும் சித்திரவதை செய்தபின்பு மேலும் விசாரணை நடத்த சிவலிங்கம் மற்றும் அவருடன் இருந்த தோழர்களை ஜீப்பில் அழைத்து சென்றனர். அப்போது சிவலிங்கம் ஜீப்பில் இருந்து குதித்து காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார். இதில் ஜீப்பில் இருந்த ஜோலார்பேட்டை காவல்ஆய்வாளர் பழனிசாமி, காவலர்கள் முருகேசன்,இயேசுதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவை சேர்ந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., வடஆற்காடு மாவட்ட எஸ்.பியாக இருந்த தேவாரத்துக்கு முழு அதிகாரத்தை தந்தார். அவர் தலைமையிலான படை, நக்சலைட் என்கிற பெயரில் முற்போக்கு இளைஞர்கள் பலரை சுட்டுக்கொன்றது, பலரை கைது செய்து சித்ரவதை செய்து, அவர்கள் குடும்பத்தை சின்னாபின்னமாக்கியது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் அரசு கணக்குப்படியே 23 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பலர் காணாமல் போனார்கள். அதுப்பற்றி விசாரணை கூட முழுமையாக நடைபெறவில்லை என்பது அப்போது குற்றச்சாட்டு.
வேட்டை முடிந்தபின், உயிர் நீத்த காவலர்களின் நினைவாக திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் அவர்களுக்கு நினைவு தூண் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு ஓய்வுப்பெற்ற டீஜிபி தேவாரம் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி, வேலூர் சரக டிஐஜி வனிதா, எஸ்.பி பர்வேஸ் குமார், முன்னால் டிஜிபி தேவாரம் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்கு பின் பேசிய தேவாரம், நக்சலைட்களை பிடிக்கும் முயற்சியில் உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6ம் தேதி காவல் துறை சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. நான் இருக்கும் வரை இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்துகொள்வேன். உலகத்திலேயே காவலர்களின் தியாகத்தை பேற்றும் வகையில் திருப்பத்தூரில் மட்டுமே இப்படி ஒரு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தற்போது தமிழ் நாட்டில் நக்சலைட்டுகளின் தாக்கம் இல்லை. இதற்கு காரணம் அன்று தியாகம் செய்த காவலர்களின் அர்ப்பணிப்பு என்றார்.