சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபர்ஸானா, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த ஆண்டு நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால், மருத்துவமனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து அப்பெண், அஜித்தின் மனைவி ஷாலினியை தொடர்புகொண்டு, மீண்டும் பணி வாய்ப்பு வழங்கக் கோரி உதவி கேட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் அப்பணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது கால இடைவெளியில் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது மருத்துவமனை நிர்வாகம், அவரின் பணியில் உள்ள குறைபாடுகளால் பணியிலிருந்து நீக்கியதாக விளக்கமளித்தது. ஆனால், அப்பெண் தொடர்ந்து வீடியோ விவகராம்தான் தன் பணி நீக்கத்திற்கு காரணம் என கூறிவருகிறார்.
இந்நிலையில் நேற்று (04.10.2021) பிற்பகல் திடீரென சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் முன்பாக, சிலருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அப்பெண் வந்தார். அத்தகவல் காவல்துறையினருக்கும் செல்ல, காவல்துறையினரும் அங்கு விரைந்தனர். அங்கு ஃபர்ஸானாவுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமாதானம் அடையாத ஃபர்ஸானா, “அவர (அஜித்) பாக்காம நான் இங்கிருந்து போக மாட்டேன் சார். அவராலதான் என் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கு. அவர சந்திக்கலனா நான் இங்கேயே தற்கொலை செஞ்சிப்பேன் சார்” என்று தெரிவித்துக்கொண்டே தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொள்ள முற்பட்டார். அப்போது அங்கிருந்த போலீசார், அவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை வாங்கிக்கொண்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை தடுத்தனர். அப்போதும் அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.