சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (02.02.2021) தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும். இன்று துவங்கும் சட்டப் பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இக்ககூட்டத்தில் ஏழு பேர் விடுதலை குறித்த அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர், ''இன்று நடக்கும் ஆளுநர் உரை என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். திமுகவைப் போல இரட்டை வேடம் போடாமல் எங்கள் பணியை செய்துவருகிறோம். திமுகவைப் பொறுத்தவரை நளினியை தவிர யாரையும் விடுதலை செய்யக்கூடாது என நிலைப்பாடு எடுத்தது. ஆனால் நாங்கள் ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை வைக்கிறோம்'' என்றார்.
மன்னிப்புக்கடிதம் கொடுத்தால் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் சேர்க்கப்படுவார் என கே.பி.முனுசாமி கூறியது தொடர்பான கேள்விக்கு, ''அது அவருடைய கருத்தாக இருக்கலாம். ஆனால் கட்சியின் கருத்து அது கிடையாது'' என்றார்.