ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி, மான் உட்பட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மான். இவருக்குச் சொந்தமான ஒன்னேகால் ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். கரும்பு நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று ரஹ்மான் தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை மிதித்துச் சேதப்படுத்தியது.
இதைப் பார்த்துக் காவலில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக யானையை வனப்பகுதியில் விரட்டுவதற்காக பட்டாசு வெடித்தனர். யானை மிதித்ததில் கால் ஏக்கர் கரும்பு சேதமடைந்தது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது.