திருச்சி மாவட்டம், துறையூர் நாகநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40). லாரி டிரைவரான இவருக்கும் சித்ரா (29) என்பவருக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதினோரு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அதே நாகநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருடன் சித்ராவுக்கு தொடர்பு இருந்து வந்தது. இதனைக் கணவர் சங்கர் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் அடிக்கடி கருங்காடு எனும் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் அவ்வப்போது சந்தித்து தனிமையில் இருந்துவந்துள்ளனர். அதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு கருங்காடு பகுதியில் உள்ள தோப்பில் தனிமையில் இருந்துள்ளனர். இதனை அறிந்து தோப்புக்குச் சென்ற கணவர், அவர்களைத் தட்டிக்கேட்க முயன்றார்.
அப்போது கணவன் மீது ஆத்திரம் அடைந்த மனைவி சித்ரா, ராஜாவுடன் சேர்ந்து சங்கரைத் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சங்கர், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.