ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்கும் காவல் நிலைய ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் ஆகியோரை பணியிட மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுவது அவ்வப்போது நடைமுறையில் உண்டு. அதே போன்று தேர்தல் காலங்களில் சொந்த மாவட்டங்களில் தொடர்ந்து பணியில் உள்ளவர்களை வேறு மாவட்டங்களுக்குப் பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்படுவது நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டவர்களுக்குப் பல்வேறு காவல் நிலையங்களுக்குப் பணியிட மாறுதல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் நகரில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் முருகன் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் அங்கிருந்து தனிப்பிரிவு காவல்துறை பணிக்கு சென்றுள்ளார். அவருக்கு பணியிட மாறுதல் உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆறு காவலர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார்கள். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் பணியிட மாறுதல் பட்டியலில் அவர்களது பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த உத்தரவில் ஓய்வு பெற்று வீட்டுக்குச் சென்றுவிட்ட காவலர்களுக்கும் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இப்படி மாவட்ட அளவில் பணியிட மாறுதல் சம்பந்தமாக பட்டியல் தயாரிக்கும்போது மிகச்சரியாக பட்டியல் தயாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உத்தரவு பெற்று வெளியிடப்படும் என்றும் தற்போது பணியிட மாறுதல் பட்டியலில் ஏன் இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் இடம் பெற்றுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் மாவட்ட கண்காணிப்பாளர்.
அதனால் அந்தப் பணி மாறுதல் பட்டியல் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளதாகக் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது போன்ற பட்டியலைத் தயாரிப்பது அமைச்சு பணியாளர்கள் என்றும் தற்போது குளறுபடியாக பணியிட மாறுதல் பட்டியல் தயாரித்தவர்கள் மீது உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.