சென்னை மாநகரில் வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மைத் தொடர்பான அறிவுரைகளை வழங்க ஆலோசனைக் குழு தேவையென தமிழ்நாடு அரசுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியிருந்தார். அந்த பரிந்துரையின் அடிப்படையில், ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் வெள்ளத் தடுப்பு அறிவுரைக் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு.
ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்புகழ். இவர் 1991- ஆம் ஆண்டு குஜராத் மாநில பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வானவர். இவர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்புவின் மூத்த சகோதரர். குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவில் பதவி வகித்த திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., கடந்த 2001- ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பத்தின்போது மீட்பு பணியை விரைவுப்படுத்தினார்.
நற்பெயரைப் பெற்ற திருப்புகழ் ஐ.ஏ.எஸ். கடந்த 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்த போது, அவரது செயலாளராகப் பதவி வகித்தார். இவர் பிரதமர் நரேந்திர மோடி நெருக்கமானவர். நரேந்திர மோடி பிரதமரான போது பிரதமர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். 2015- ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பேரிடர் மேலாண்மைத் துறையில் கைத்தேர்ந்த திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., குஜராத் மாநிலம் மட்டுமின்றி தேசிய அளவிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
2015- ஆம் ஆண்டு நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மறுகட்டமைப்பு மேலாண்மைக்கு ஆலோசனைகளை வழங்க திருப்புகழை அனுப்பி வைத்தது மத்திய அரசு.