கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ செவிலியர்களை பணியமர்த்த கோரி செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையை பொறுத்த வரை 1200 பணியிடங்கள் உள்ளது. இதில் தற்பொழுது 205 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.
இதை தவிர்த்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து 95 செவிலியர்கள் மாற்றுப்பணிக்காக தற்பொழுது இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் 1200 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில் மொத்தமாக 300க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு துணையாக செவிலியர் பயிற்சி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருக்கிறது.
அதனால் செவிலியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. எனவே வேலைப்பளு கடுமையாக இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் குறைவாக செவிலியர்கள் இருக்கின்ற காரணத்தால் வேலைப்பளு அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல் விடுமுறை கூட எடுக்க முடியாத கூழல் ஏற்பட்டுள்ளது என கூறி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திகொண்டிருந்த செவிலியர்களிடம் கோவை மருத்துவமனை டீன் நிர்மலா நேரடியாக வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் தங்களது கோரிக்கையை நேரடியாக அரசு கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என உறுதி அளித்துள்ளார். இருந்த போதிலும் செவிலியர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.