தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் டெல்லி சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்த நிலையில், தமிழக ஆளுநரைச் சந்தித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்' ஆளுநரிடம் அரசியல் பற்றியும் பேசினேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது' எனத் தெரிவித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது மற்றும் ஆளுநரிடம் அரசியல் பற்றிப் பேசியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது எனக் கூறியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பாஜகவின் மாநில மீனவர் அணி சார்பில் பிரம்மாண்டமான படகு பேரணி நடந்தது. இதில் சுமார் 250 மீனவ படகுகளுடன் ஆயிரம் மீனவர்களுடன் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஈசிஆர் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரையில் கடலில் பேரணி சென்றனர்.அதில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், '' 11 மணிக்கு ஆட்சி பொறுப்பேற்றால் 11.7 மணிக்கு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் சுரண்டலாம் என்று சொன்னவர் இன்று அமைச்சராக இருக்கிறார். பால்வளத்துறை அமைச்சர் மேல் இருக்கிற ஊழலை நாங்கள் சொல்லவில்லை. அவர் வாயை திறந்தால் அவரே ஊழலை ஒத்துக்கொள்கிறார். இதேபோலத்தான் ஒவ்வொரு அமைச்சர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அதே வரிசையில்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.
இவர்களே உளறி உளறி நம்ம முதல்வரை முட்டு சந்தில் நிக்கவைக்கிறார்களா இல்லையா என்பதை பாருங்க. இது தமிழகத்தில் நடக்கத்தான் போகிறது. ரஜினிகாந்த் சொன்னதில் என்ன தவறு. ஆளுநர் கூப்பிட்டு அரசியல் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அரசியல் என்றால் ஏன் பிற்போக்கு தனமாக நினைக்க வேண்டும். ரஜினிகாந்த் அரசியல் பேசினேன் என்று கூறுவது சமுதாயத்தில் நடக்கக்கூடிய விஷயங்களைக் கூறினேன் என்பதுதான் அர்த்தம். கம்யூனிஸ்டுகளுக்கு வேலையில்லை, திமுக கொடுக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை கையிலேயே சுமந்து கொண்டு அதை மூக்கில் வைத்துக்கொண்டு உயிரோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.