தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது மஞ்சாராஹள்ளி ஊராட்சி. அங்கு டி.சோளப்பட்டி எனும் குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நில பட்டாக்கள் தொடர்பான எந்த ஒரு தகவலும் 1929 ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய நிலங்களை மாற்று நபருக்கு விற்கவோ அல்லது புது நிலங்களை வாங்கவோ முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுடைய கிராமம் தொடர்பான ஆவணங்களைப் பதிய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோக்களில், 'எங்க பெரியவங்க எல்லாம் ஆண்டுட்டு போயிட்டாங்க. நாங்க நிலத்தை யாருக்கும் விக்க முடியல. நிலத்தை வாங்கவும் முடியல. தர்மபுரிக்கு போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, பென்னாகரம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, மேச்சேரி போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, சேலம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க. ஏன் எங்களுக்கு மட்டும் பதிவாகவில்லை. நாங்க என்ன வானத்தில் இருந்தா குதிச்சோம். கவர்மெண்ட் எங்களுக்கு மட்டும் ஏன் பதிவு செய்யாமல் விட்டது. ஓட்டு கேட்க மட்டும் வரீங்க, எங்களுக்கு போடுங்க.... எங்களுக்கு போடுங்க... என்று. ஏன் எங்களின் இடத்தை பதிவு பண்ணக்கூடாது. பதிவு பண்ணி குடுங்க' எனத் தெரிவித்துள்ளனர்.