தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ. 3000 உதவித் தொகையை இளம் வழக்கறிஞர்கள் பெறுவதற்கான தகுதியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இளம் வழக்கறிஞர்களுக்கு, ரூ.3000 உதவித் தொகை, இரண்டு ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் என்று, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அவரது அறிவிப்புக்கு, பார்கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்த உதவித்தொகையை பெறுவதற்கான தகுதியை, தமிழ்நாடு பார்கவுன்சில் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் பேசினார்.
“தமிழ்நாடு முதல்வர், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 3,000 உதவித்தொகை வழங்குவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்ததற்கு முதலில் வழக்கறிஞர்கள் சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உதவித்தொகையை பெற, இளம் வழக்கறிஞர்கள் கீழ்கண்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
1.தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் சட்டம் படித்திருக்க வேண்டும்.
2. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
3. பார்கவுன்சிலில் பதிவு செய்து மூன்று வருடங்களுக்குள் இருக்க வேண்டும்.
4. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும்.
5. ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதி படைத்த இளம் வழக்கறிஞர்கள், ஜூலை 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் பார்கவுன்சில் வெப்சைட்டில் உள்ளது. அதன் வழியாக, தகுதி படைத்த வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.