மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 34). இவர் திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பல்வேறு உணவகங்களில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலைய பகுதியில் நின்றிருந்த போது, அங்கிருந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த மூவரும் சேர்ந்து விக்ரமை அடித்து உதைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் மாரிஸ் திரையரங்கம் நோக்கி ஓடிச் சென்றுள்ளார். எனினும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று மாரிஸ் பாலம் அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் வைத்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அலறி துடித்த விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், திருச்சி உறையூர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கணவரை இழந்த தீபிகா (வயது 27) கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சத்திரம் பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்த இவருக்கும் விக்ரமுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டை கீழ சிந்தாமணியைச் சேர்ந்த பாலா (வயது 34), சந்துக்கடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது 35), நண்பர்களான இவர்களுக்கும் தீபிகாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பாலா, கணேசன் இருவரும் சேர்ந்து விக்ரமை கண்டித்ததாகவும், அதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூவரையும் போலீசார் அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்யபிரியா, துணை ஆணையர் அன்பு, ஆய்வாளர் தயாளன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.