
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'கூட்டணிக் கட்சியினருடன் முழு மூச்சுடன் பணியாற்றி தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம். வரும் தேர்தலில் வெற்றிபெற்று, வெற்றி மாலையை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம். அனைவரும் மூக்கில் விரலை வைத்து பிரமிக்கும் வகையில் மிகச்சிறந்த ஆட்சியைக் கொடுத்துள்ளோம். புயல், மழை என இயற்கைப் பேரிடர்களை வெற்றிகரமாகச் சமாளித்து நிவாரணப் பணிகளைத் திறம்படச் செய்தோம். நாம் ஆற்றாத வளர்ச்சிப் பணிகள் உண்டா? நாம் செய்யாத தொண்டு ஏதேனும் உள்ளதா? நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை எங்கள் அனுபவம் உணர்த்துகிறது. 2011, 2016 ஆம் ஆண்டுகளைப் போல் இப்பொழுதும் வெற்றியைத் தர மக்கள் காத்திருக்கின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.