இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளில் தொழில் தேவைக்கான ஆக்சிஜன் தயாரிப்பை நிறுத்தி மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜனை அனுப்பிவைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதனைப் பயன்படுத்திக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், எங்களால் தினமும் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துதர முடியும். அதனால் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என மனு செய்தது. தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி தரலாம் என மத்திய அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசும், நீதிமன்றமும் முடிவெடுத்தால் அதனை வரவேற்போம் எனத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், ''நமது உயிர் என்பது முக்கியமானது. ஒரு நிறுவனம் நாங்கள் ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள். உச்சநீதிமன்றமும் ஏன் அரசே அதனையேற்று நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. அரசு அப்படி எடுத்து நடத்தும் பட்சத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். அந்தப்பகுதி மக்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்கத்தான் செய்யும். இதை ஆக்சிஜன் தயாரிப்பாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர அரசியலாகவோ அல்லது உள்நோக்கத்தோடு பார்க்கக்கூடாது'' என்றார்.