காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சை மாவட்டத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (05/08/2021) காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உட்பட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, "மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். தமிழக பாஜக என்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பக்கம் நிற்கும். காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். செய்ய முடியாத ஒன்றைக் கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் செய்துவிடுவதாகக் கூறுகிறார்கள்" என்றார்.
இதனிடையே, இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "மேகதாது அணையை அரசியல் காரணத்திற்காக எதிர்க்கிறார்கள். யார் எதிர்த்தாலும் எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. விரைவில் உரிய ஆவணங்களுடன் அனுமதி பெற்று மேகதாது அணையைக் கட்டுவோம். அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை; அணைக்கு எதிராக யார் போராடினாலும் பரவாயில்லை" என தமிழ்நாடு பாஜகவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.