சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளதாக கடிதம் ஒன்று அனுப்பியிருந்தனர். அதில் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான சொத்து விவரங்கள், கட்டளைதாரர்கள், நகைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கணக்கெடுப்பு செய்வதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில், “நடராஜர் கோவில், தீட்சிதர்கள் சமுதாயத்தினால் மக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டதற்கான ஆதாரம். தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து கோயில் பராமரிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், கோவிலில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையில் நன்கொடைகள் பெற்று தினசரி பூஜை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றால் அது குறித்த வரவு - செலவு கணக்குகள், கோவில் அமைந்துள்ள இடத்தின் நில உரிமை குறித்த வருவாய்த்துறை ஆவணங்கள், நில உரிமை இறைவன் பெயரில் இருப்பின் மேற்கண்ட நிலம் மன்னர்களால் அல்லது அரசால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா? அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வழங்கப்பட்டதா? என்பதற்கான ஆவணங்களை வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தவறும் பட்சத்தில் தங்களால் அளிக்கக் கூடிய விவரங்கள் எதுவும் இல்லை; அடிப்படை ஆவணங்கள் எதுவும் இன்றி ஊடகங்களில் தவறான தகவல்கள் தங்களால் அளிக்கப்பட்டு வருகிறது என முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இதுவே கடைசி கடிதம் இனிமேல் இந்து சமய அறநிலையத் துறையினருக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை என்றும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளதாகவும் கோவிலைக் கையகப்படுத்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், 'சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்களால் உருவாக்கப்பட்டது. எனவே கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ள நாங்களும் தயாராக உள்ளோம்'' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.