Skip to main content

வளர்மதி , பகத்சிங், திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
க்


 
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடு முழுவதும் பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு ஆபத்து - ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’நாடு முழுவதும் இடதுசாரி சிந்தனையாளர்கள், தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். 2018 ஜனவரி 1 அன்று மஹராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்ட போது சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வன்முறையை ஏவி பெரும் கலவரத்தை உருவாக்கினர். இச்சம்பவத்திற்கு பொறுப்பான சங்பரிவார் கூட்டத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, புனே காவல்துறையினர் இடதுசாரி சிந்தனையாளர்களான ஹைதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவரராவ், மும்பையைச் சார்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெர்னான், கான்சால்வஸ், அருண் பெரைரா, தொழிற்சங்க வாதியும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் டில்லியில் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர் கவுதம் நவலகா ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களது வீடுகளிலும் தலித் உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனந்த் டெல்டும்டே, ஸ்டான்ஸ் ஸ்வாமி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் பலரையும் நாடு முழுவதும் தேடி வருகின்றனர்.

 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கருத்து வேறுபாடு உள்ளவர்களை கைது செய்வது ஜனநாயக விரோதமானது என்று சாடியதுடன், கைது செய்தவர்களை அவர்களது வீட்டுக்காவலிலேயே வைக்க உத்தரவிட்டுள்ளது. மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பிஜேபி ஆட்சியாளர்கள் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மறுபக்கம் அப்பாவி சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை பொய்யான காரணங்களைச் சொல்லி கும்பலாக திரண்டு தாக்குதல் தொடுத்து படுகொலை செய்து வருகின்றனர். ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

பாஜக ஆட்சியில் நடைபெறும் இத்தகைய அராஜகமான நடவடிக்கை அவசர கால கொடுமைகளுக்கு ஒப்பானதாகும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் மாறானது ஆகும்.

 

இதேபோன்று தமிழகத்திலும் அதிமுக அரசு ஜனநாயக உரிமைகளை காலிலே போட்டு மிதித்து வருகிறது. வெள்ள நிவாரண நிதி வசூலில் ஈடுபட்ட மாணவி வளர்மதியிடம் காவலர் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்டதை தட்டிக் கேட்டதற்காக அவர் மீதே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்ற காரணத்தைக் கூறி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மீண்டும் மீண்டும் வழக்குகள் பதிவு செய்ததோடு, கொடூரமான ‘யுஏபிஏ’ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

 

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக போராடிய அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பழனியைச் சேர்ந்த பகத்சிங் மீது பொய்யான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

வளர்மதி , திருமுருகன் காந்தி, பகத்சிங் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதோடு, பொய் வழக்கு போட்ட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

எட்டுவழிச்சாலையை எதிர்த்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த சிபிஐ (எம்) சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பி. டில்லிபாபு, சம்பந்தப்பட்ட கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடச் சென்ற கே.பாலபாரதி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்துப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ராதிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்திற்கும் மேலாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த வந்த மக்கள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்ததோடு, 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமுற்று இன்றைக்கும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய சமூக செயல்பாட்டாளர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் சாதாரண பிரச்சனைகளுக்காக கூட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 8வழிச் சாலையை எதிர்த்து நடை பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கைது செய்யப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாஜக, அதிமுக ஆட்சியினர் ஜனநாயக உரிமைகளுக்கு சாவு மணி அடித்து பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கும் மோசமான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய, ஜனநாயக விரோத, அராஜகமான போக்கினை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க முன்வர வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.’’

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?” - கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
 K. Balakrishnan Condemned to finance minister nirmala sitharaman

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. அதே சமயம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர், “கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா?” எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தொடர்பாகப் பேசியது சர்ச்சையானது. 

இந்த சூழலில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (23-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசும், மத்திய நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசைப் பற்றி முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசக்கூடாது. மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு எந்த மத்திய அமைச்சர் வந்தார்கள்? இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஒரு ரூபாய் கூட கூடுதல் நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. நிவாரணப் பொருட்களுக்காகவும், மீட்புப் பணிக்காகவும், தமிழக முதல்வர் ரூ.21,000 கோடி கேட்டார். ஆனால், அதற்கு மத்திய அரசு ரூ.21 கூட தரவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஏன் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கூடாது? தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். தமிழக மக்களுக்குத் தர வேண்டிய நிதியை கொடுத்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” என்று கூறினார். 

Next Story

‘ஜெயலலிதா பேசிய மாநில நலன்; காற்றில் பறக்கவிட்ட இபிஎஸ்’ - பாலகிருஷ்ணன் சாடல்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

K. Balakrishnan who severely criticized Edappadi Palinisamy

 

திமுக கூட்டணிக் கட்சிகளை குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளைப் பார்த்து இந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று ஊடகங்களிடம் கூறுகிறார். மக்களுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவிடம் கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றவும், கட்சியை நடத்தவும் பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிசாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது. ஈரோடு இடைத்தேர்தலில் தனது சொந்தக் கட்சி வேட்பாளரை அறிவிப்பதற்கு கூட பாஜக தலைவரின் அனுமதிக்காக காத்திருந்த எடப்பாடி பழனிசாமியின் நிலைமையை கட்சியினரே அங்கலாய்த்து வருகின்றனர்.

 

K. Balakrishnan who severely criticized Edappadi Palinisamy

 

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளந்தது. மத்திய ஆட்சியின் தயவோடு அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பேசி வந்த மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளைக் கூட காற்றில் பறக்கவிட்டார். ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று தயங்காமல் செயல்பட்டார். இதன் விளைவாக மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் விரோத சட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்கும் முடிவு உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஆதரித்தது அதிமுக. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியது உட்பட மத்திய அரசின் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகள் எதையும் எதிர்க்காமல் அடங்கி கிடந்தது பழனிசாமியின் ஆட்சி.

 

தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சியான பிறகும் கூட இந்தப் போக்கில் மாற்றமில்லை. தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் கண்டனத்தையும் தாண்டி, ஆளுநரின் அரசியலுக்கு ஆதரவளித்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போதும் கூட, நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ள மோடியின் உற்ற நண்பரான அதானியின் ஊழல் - முறைகேடு பற்றியும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி ஆட்சியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல் குறித்த பிபிசி ஆவணப்படம் பற்றியும் எடப்பாடி வாய் திறக்கவில்லை. நாட்டு மக்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பற்றி பேசக்கூட விருப்பமில்லாத எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது நகைப்புக்குரியது. அவலத்திற்குரிய இந்தப் போக்கிற்கு வரும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தயாராகவுள்ளார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

 

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரமும் நாட்டின் சுதந்திரத்தையும், மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவத்தையும், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் சீரழித்து வருகின்றனர். மாநில உரிமைகளை நசுக்கி, ஒற்றை ஆட்சியை நிலைநாட்டுவதுதான் அவர்களின் நோக்கம். இந்தக் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசியல் சட்ட பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, மாநில உரிமைகள் உள்ளிட்ட கொள்கை அடிப்படையிலேயே திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக, ஆர்எஸ்எஸ் சதிக் கூட்டத்தை தோற்கடிக்க முயல்கின்றன. ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவினை அதிமுகதான் தாங்கிப் பிடித்து வருகிறது என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் சொந்த கட்சிக்கே எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதுகிறார் என்பது திண்ணம்” எனக் கூறியுள்ளார்.