Skip to main content

இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
srilanka muslims


இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்கள் மீது வன்முறையையும், காட்டுமிராண்டித்தனத்தையும் எப்போதும் கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் சிங்களப் பேரினவாத அரசு தற்போது இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களையும் திட்டமிட்டுத் தாக்கத் தொடங்கியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இனத்துவேசத் தாக்குதலையும், வன்முறை வெறியாட்டத்தையும் போல மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முனைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. அம்பாறையில் உள்ள ஒரு உணவகத்தில் தொடங்கப்பட்ட இவ்வன்முறை வெறியாட்டம் பள்ளிவாசல் மீது தாக்குதல், இஸ்லாமியர்களின் உடமைகளைச் சேதப்படுத்துதல் என நீண்டு இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரானத் தாக்குதல்களாக சிங்களப்பேரினவாதிகளால் மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.

கண்டியின் திகன பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியர்களின் வணிக வளாகங்கள் மீது திட்டமிட்டக் கோரத்தாக்குதலைத் தொடுத்து மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உண்டாக்கியிருக்கின்றனர். புத்தப் பிக்குகள் தலைமையில் நடைபெற்ற இவ்வன்முறை வெறியாட்டத்தில் இஸ்லாமிய தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பதன் மூலம் இக்கலவரத்தின் வீரியத்தை அறிந்துகொள்ளலாம்.

சிங்களப்பெளத்தத் தீவிரவாத நாடான இலங்கையின் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிரான இக்கொடுங்கோல் போக்கைக் கண்டித்து கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமியத்தமிழர்கள் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையில்தான் அவசர நிலையினை பிரகடனம் செய்திருக்கிறது இலங்கை அரசு.

இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து வரும் கலவரக்காரர்களையும், இனத்துவேச நடவடிக்கையில் ஈடுபட்டு கலவரத்தை உருவாக்கும் சிங்கள இனவெறி அமைப்பினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும், இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இத்தோடு இஸ்லாமியத் தமிழர்கள் மீதானத் தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசும், சர்வதேசச்சமூகமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோருகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழர் சுயநிர்ணய போராட்டத்தை ஒடுக்கிய சிங்கள அரசை ஆதரித்த உலக நாடுகள் இனியேனும் அவர்களின் பௌத்த மதத்தீவிரவாதத்தை புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்