பிப்ரவரி 27ல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என ஈரோடு அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர், முன்னாள் எம்.பி. செல்வகுமாரசின்னையன் கூறினார். அவர் இது சம்பந்தமாக தேர்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் மாநகராட்சி அலுவலகத்தில் 30 ந் தேதி அதிமுக வழக்கறிஞர்களுடன் வந்து மனு கொடுத்தார்.
அப்போது அவர் கூறும்போது, “இடைத்தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும் வாக்காளர்கள் பூத் சிலிப் உடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேர்தல் தேதிக்கு 15 நாட்கள் முன்பே பூத் ஸ்லிப் வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அனுமதி பெற்ற அலுவலர்கள் மட்டுமே பூத் ஸ்லிப்பை வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும்.
மற்ற தனி நபரிடமோ அல்லது கட்சியிடமோ வழங்க கூடாது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பூத் சிலிப் வழங்கும் அதிகாரிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த அலுவலர்கள் விடுபட்டுப் போன வாக்காளர்கள் பூத் ஸ்லிப் கேட்கும் பொழுது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே வழங்க வேண்டும்.
ஒருவருக்கு ஒரு பூத் சிலிப் மட்டுமே வழங்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பூத் ஸ்லிப் வழங்கக் கூடாது. இதே போன்று ரயில்வே காலனி சம்பத் நகர் பகுதிகளில் இருந்தவர்கள் பலர் வேறு இடம் குடி பெயர்ந்துள்ளனர். அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் பூத் சிலிப் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.