விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி, பெண்களிடம் செயின் பறிக்கும் நோக்கத்துடன் சுற்றி வந்துள்ளனர் மூன்று பெண்கள். இந்தப் பெண்கள் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடமிருந்து பர்ஸ் மற்றும் செயின் ஆகியவற்றைத் திருட முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட மோகன்ராஜ் மூன்று பெண்களையும் மடக்கிப் பிடித்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் மனைவி மேகலா(வயது 45), ஜோசப் மனைவி மஞ்சு (வயது 47), ஐயப்பன் மனைவி காளியம்மாள் (வயது 46) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரும் இதுபோன்று குடமுழுக்கு விழாக்கள் மற்றும் கோயில் தேர் திருவிழாக்களில் கூடும் பெண்கள் கூட்டத்தில் புகுந்து செயின் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும், இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் போலீசார் மூவரையும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு மயிலம் அருகே நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடம் செயின் பறிக்கும் போது பிடிபட்ட ஐந்து பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த செயின் பறிக்கும் சம்பவத்தில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது விழுப்புரம் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.