விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெண்ணையாறு கெடிலம் ஆறு, வராக நதி ஆகியவற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது மணல் கடத்தல் கும்பலைக் கைது செய்தும் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.
ஆனால், மணல் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியாமல், திணறி வருகிறார்கள். இந்தநிலையில் வளவனூர் அடுத்துள்ள வடவாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருண்பிரசாத், ராஜேஷ், விஷ்வா ஆகிய மூவரும் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி மணல் கடத்தலில் ஈடுபட்டுபட்டபோது, போலீசார் அவர்களை பிடிக்கச் சென்றனர். அப்போது போலீசார் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும், இதேபோன்று மணல் கடத்தலில் அவ்வப்போது கைது செய்யப்படுவதும், ஜாமீனில் வெளிவருவதும், மீண்டும் அடுத்த மணல் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவதும் நடந்துவருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அளித்த உத்தரவின்படி, மூவரும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீதும் இதேபோன்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்று, கைது செய்வதன் மூலம் மணல் கடத்தல் தடுக்கப்படுமா என்பது போகப்போகத்தான் தெரியவரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.