விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது வேம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாவேந்தர் என்பவரின் மகன் தங்கமணி (43). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, திண்டிவனத்தில் இருந்து, தனது சொந்த ஊரான வேம்பூண்டிக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலை அருகில் உள்ள வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த ஜவகர் பாபு என்பவர், இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார்.
அப்படி வரும்போது, ஜவகர் பாபு, தங்கமணி வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தங்கமணியை மீட்டு, அவரது உறவினர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சில தினங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
தங்கமணி, வீட்டிற்கு வந்த 10 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல், மேம்பூண்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீது நஷ்டஈடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டி ரோஷனை காவல் நிலையத்தில், தங்கமணி குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில், மூன்று மாதத்திற்குப் பிறகு, நேற்று திண்டிவனம் வட்டாட்சியர் செல்வம் தலைமையில், ரோஷனை காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் மற்றும் மருத்துவக் குழுவினர், புதைக்கப்பட்ட தங்கமணி உடலை தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர்.
புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை மூன்று மாதத்திற்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.