
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அம்மணிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தராஜன் - புஷ்பராணி தம்பதியின் மகள் வித்யா ஸ்ரீ (20). இவர் பேராவூரணி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்து தற்போது, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
கல்லூரியில் சேர்ந்தவுடன் தன்னை தேசிய மாணவர் படையில் (என்சிசி) இணைந்துக் கொண்டா அவர், அதன் மூலம் துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் துல்லியமாக இலக்கை சுட்டுள்ளார். இதனைப்பார்த்த கல்லூரி தாளாளர் திவாகரன் மாணவியை ஊக்கப்படுத்தயதோடு என்சிசி மூலம் திருச்சியில் அளிக்கப்படும் பயிற்சிகளுக்கும் செல்ல அனுமதி அளித்தார். அதன் காரணமாக தொடர்ந்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மதுரையில் நடந்த என்சிசி 48 ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் போது 8 போட்டிகளில் பங்கேற்று, 6 தங்கம், 1 வெண்கலம் வென்றார். அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான 32 வது துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, ஒரு தங்கம் ஒரு வெண்கலம் வென்றார். 2024 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற 49 ஆவது மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று 2 வெண்கலம் பெற்றார். 2024 ஆம் ஆண்டு சென்னை சராகிரி துப்பாக்கி சுடும் மையத்தில் நடைபெற்ற 15 வது தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு, அதன் மூலம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.

பின்னர், டெல்லியில் பிப்ரவரி 2025-இல் கர்னிசிங் சூட்டிங் ரேஞ்ச் தேசிய ட்ரையல்ஸ் 1, 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று மெடல் வாங்கிய மாணவி வித்யா ஸ்ரீ அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். இதுவரை இந்த போட்டிகளுக்கு சென்று வர உதவியும், ஊக்கமும் கல்லூரி மூலமும் என்சிசி மூலம் பயிற்சிமும் கிடைத்து. ஆனால் தற்போது கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் இனிமேல் அதற்கான பயிற்சிகளுக்கும், செலவுகளுக்கும் மாணவிக்கு தடையாகிவவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் பயிற்சி கட்டணம், போக்குவரத்துச் செலவு இதனை எப்படி சமாளிப்பது என்று மாணவியின் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு 49 ஆவது மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், குறுகில காலத்தில் தரமான பயிற்சியால் குறிபார்த்து சுட்டு பல பதக்கங்களை வென்ற மாணவியை உறவினர்கள், கிராமத்தினர் பாராட்டிவரும் நிலையில் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரும் நேரில் அழைத்துப் பாராட்டி பொன்னாடையும் அணிவித்து மேலும் சாதிக்க தமிழ்நாடு அரசு துணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மாணவி வித்யாஸ்ரீ நம்மிடம் கூறும் போது.. அம்மணிச்சத்திரன் என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான் என்சிசி மூலம் ஜூனியர் விமன் கேட்டகிரியில் 50 மீட்டர் ரைபிள்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறேன். செங்கமலத்தாயார் கல்லூரி நிர்வாகம், என்சிசி உயர் அலுவலர்கள் நான் போட்டியில் பங்கேற்க பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றனர். தற்போது தேசிய போட்டியில் பங்கேற்க தேர்வாக உள்ளேன். அடுத்து லைசன்ஸ் பெற முயற்சி செய்து வருகிறேன். தொடர்ந்து பயிற்சி பெற வேண்டியுள்ளது. அதே போல இனி வரும் காலங்களில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க, அதற்கான நவீன துப்பாக்கி மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும். அதற்கான பணம் தடையாக உள்ளது. என்னைப் போன்ற திறமையான கிராமப்புற ஏழை மாணவர்கள் இனம் கண்டு தமிழ்நாடு அரசு உதவி செய்து வருவது போல என் பயிற்சிக்கும் போட்டிகளுக்கு சென்றுவரவும் உதவிகள் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் காவல் துறை பணிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளது” என்று வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.