பெரியார் பற்றி கருத்து கூற எச்.ராஜாவுக்கு தகுதி கிடையாது என்று விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாயர் எச்.ராஜா, பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என பேஸ்புகில் பதிவிட்டதை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:-
திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல, தமிழகத்தில் ஈ.வெ.ரா தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா என்பவர் தனது பேஸ்புகில் பதிவு செய்ததை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஈ.வெ.ரா தந்தை பெரியார் அவர்கள் ஒரு சரித்திரம் படைத்த யுகநாயகன், அவருடைய புரட்சிகரமான கருத்துக்களை தமிழகத்தில் யாரும் கூறியது கிடையாது. அவரைப்பற்றி கருத்துக்கள் கூற எந்த தலைவருக்கும் தகுதிகள் கிடையாது. எனவே ஹெச்.ராஜா தனது பேஸ்புகில் பதிவிட்டதும் தவறு, கடுமையான எதிர்ப்பு வந்தவுடன் வருத்தம் அடைகிறேன் என தெரிவிப்பதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன், அந்த தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என பல முறை ஆராய்ந்து அதன்பின் கருத்துக்களை தெரிவிக்கவேண்டும். கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல இல்லாமல், பதிவிடுவதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.