வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி, மகள் பேரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. புதுக்கோட்டையில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி வீட்டில் 3 மணிநேரம் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், கோவையில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நகை மதிப்பீட்டாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நகைகளை மதிப்பிட்டுவருகின்றனர். சுந்தரம் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி, பென்ஸ் கார் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடைபெற்றது.