திருச்சி சமயபுரம் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கேஷ்வெல்டிங் வைத்து 5 லாக்கரை உடைத்து பல கோடி மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்கிற சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தொடர்ச்சியாக திருச்சி புறநகர் பகுதியான இந்த இடங்களில் கடந்த மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக 3 முறை வங்கிகளை கொள்ளையடிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளது. 4 வது முறையாக இந்த வங்கியை கொள்ளையடித்திருக்கிறார்கள்.
இந்த மாதத்தில் ஜனவரி மாதம் உப்பியபுரத்தில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி, கடந்த 18ம் தேதி மண்ணச்சநல்லூர் மத்திய கூட்டுறவு வங்கி கொள்ளையடிக்க முயற்சி, கடந்த 21 ம் தேதி மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதியை கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருந்தாதாலும், லாக்கர்களை உடைக்க முடியாததாலும் வங்கிகளை கொள்ளையடிக்க முடியவில்லை. ஆனால் தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருப்பது காவலர்களின் அலட்சியமே என்கிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் எஸ்.பி. ஜீயாவுதீன், டிஐஜி லலிதா ஆகியோர் கொள்ளை சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.
வங்கி அருகிலேயே கேஷ்வெல்டிங் மிஷின், மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆடைகள் ஆகியவற்றை கண்டெடுத்து இருக்கிறார்கள். மாடியில் துளையிட்டுதான் உள்ளே இறங்கி இருக்கிறார்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொத்தம் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே லாக்கரில் மட்டும் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.