நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று (27.10.2024) நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். இதனையடுத்து இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.
முன்னதாக இந்த மாநாட்டிற்காகப் பயணம் மேற்கொண்ட போது வெவ்வேறு விபத்துகளில் சிக்கி த.வெ.க. கட்சியைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் த.வெ.க. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் அக்கட்சியின் தலைமை கழகம் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு எவ்வித இரங்கலும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது. இந்நிலையில் த.வெ.க. மாநாட்டிற்கு வரும்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கட்சித் தொண்டர்களான திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் கில்லி வி.எல். சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெ.கே. விஜய்கலை, சென்னை பாரிமுனையை சேர்ந்தவர்களான வசந்தகுமார், ரியாஸ், செஞ்சியைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. த.வெ.விற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கட்சியின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கட்சித் தொண்டர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்சித் தொண்டர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.