Skip to main content

'வேங்கை வயல் விவகாரம்; வன்கொடுமை தடுப்பு சட்டம் நீக்கப்பட்டது ஏன்?'- காரசார வாதம்

Published on 01/02/2025 | Edited on 01/02/2025

 

'The vengai vayal Issue; Why was the Prevention of Atrocities Act removed?'

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் அரசு தரப்பில் அறிவியல் சாட்சியங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வேங்கைவயல் பகுதிக்குள் போராட்டங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் ஊருக்குள் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில்  சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், அந்த குற்ற பத்திரிக்கையில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்கறிஞர் கனகராஜ் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கார்வேந்தன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு ஆஜராகினர். இதில் இரண்டு தரப்பும் கடுமையான வாதங்களை வைத்துக்கொண்டனர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பவானி மோகன் வாதிடுகையில், 'இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமைகள் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக தான் வேங்கை வேல் சம்பவம் இருக்கிறது. சிபிசிஐடி போலீஸ் இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கிறது. அரசியல் சட்ட பிரிவின்படி அதை ஏற்கக் கூடாது' என வாதிட்டார். அப்பொழுது நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞரை பார்த்து 'நீங்கள் ஏன் இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கியதை புகார்தாரருக்கு தெரிவிக்கவில்லை' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ' இந்த வழக்கு தொடர்பாக தகவல் சொல்வதற்கு நாங்கள் மூன்று முறை அவர்களுக்கு சம்மன் அனுப்பினோம்.  ஆனால் அவர்கள் வரவில்லை. வர முடியாது என எழுத்துப்பூர்வமான கடிதத்தை எங்களுக்கு கொடுத்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது' என வாதிட்டார்.

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று யாரும் இல்லை. மனிதக் கழிவு கலந்த குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட தண்ணீரை யாரும் குடிக்கவில்லை. ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த குழந்தைகள் இந்த கழிவுக் கலக்கப்பட்ட குடிநீரை குடிக்க வில்லை என்பது ஆய்வுகளில் தெரிந்துள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம் என வாதிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தி, பிப்ரவரி 3ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்