வேலூர் கோட்டை வளாகத்துக்குள் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு காவல்துறைக்கு புதியதாக தேர்வு செய்யப்படும் ஆண், பெண் காவலர்களுக்கு காவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பயிற்சி பள்ளியில் தற்போது, கடந்த 2018 டிசம்பர் மாதம் 196 பெண் காவலர்கள் பயிற்சிக்காக இங்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஜூலை 5 ஆம் தேதியோடு பயிற்சி நிறைவு பெறுகிறது. இங்கு பயிற்சி பெறும் பயிற்சி பெண் காவலர்களில் நான்கு பேருக்கு ஒரு அறை என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்படித் தான் மதுரையை சேர்ந்த ஒரு இளம் காவலர், வேலூர் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த 4 இளம் பயிற்சி காவலர்கள் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளனர். அறையில் தங்கியிருந்தவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை வந்துள்ளது.
அந்த சண்டையில் மதுரையை சேர்ந்த இளம்பெண்ணை மற்ற பெண்கள் லத்தியால் தாக்கியுள்ளனர். அடி பொறுக்க முடியாமல் அலற மற்ற அறையில் இருந்த இளம்பெண்கள் வந்து மீட்டுள்ளனர். இதுப் பற்றி பயிற்சி பள்ளி அதிகாரிகளிடம் அப்பெண் முறையிட்டுள்ளார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மதுரையில் உள்ள தனது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனே வேலூருக்கு வந்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அப்போதும் சரியாக பதில் சொல்லாததால், அடிவாங்கிய பெண்ணோடு சேர்ந்து பெற்றோர் பயிற்சி கல்லூரி வளாகம் வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அதிர்ச்சியான பயிற்சி பள்ளி அதிகாரிகள், அந்த பயிற்சி காவலர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சமாதானம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதனை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.