ரயில் நிலையத்தில் மூதாட்டியிடம் குழந்தையை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளும்படி கூறி கொடுத்து விட்டு பெண் மாயமான சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி சுந்தரி என்பவர் நேற்று (03.05.2023) மதியம் ரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைமேடை எண் ஒன்றில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் கை குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் சுமார் 6 மாதம் மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படியும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் கூறி விட்டுச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த மூதாட்டி சுந்தரி இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி குழந்தையை ஒப்படைத்துள்ளார்.
இதனைக் கேட்டு பரபரப்பான காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் பெண்மணி வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறி ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வது தெரியவந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இருப்புப்பாதை காவலர்கள், யார் அந்த பெண்மணி? குழந்தை அவருடையது தானா, அல்லது கடத்தல் குழந்தையா? இவர்கள் எந்த ஊர்? பச்சிளம் குழந்தையை ஏன் யாரோ ஒருவரிடம் தந்துவிட்டு சென்றார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை விட்டுச் சென்ற பெண்மணி மற்றும் அவரது கணவர் ஏறிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த ஆறு மாதக் குழந்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.