வேலூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம் ஒன்றியத்தின் வடக்கு ஒன்றிய பகுதியின் செயலாளராக இருப்பவர் கல்லூர் ரவி. இவர் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர். நீண்ட வருடங்களாக குடியாத்தம் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். திமுகவின் குடியாத்தம் வடக்கு ஒன்றியத்தின் துணை செயலாளராக இருப்பவர் சத்தியானந்தம். இவர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏவின் நெருங்கிய குடும்ப உறவினர். 2016 சட்டமன்ற தேர்தலின் போது கே.வி.குப்பம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியை சந்தித்தார் கல்லூர்.ரவியின் தம்பி மனைவி அமுலு. தேர்தல் நேரத்தில் தேர்தல் செலவுக்கான தொகையை ரவி, சத்தியானந்தத்திடம் கொடுத்து வைத்திருந்தார். சத்தியானந்தத்தின் பண்ணை வீட்டில் வைத்து தான் பணம் தொகுதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒன்றிய செயலாளர் ரவி, சிலரிடம், தேர்தலின் போது நான் தந்து வைத்திருந்த பணத்தை சத்தியானந்தன் சுருட்டியுள்ளார் என கூறியதாக கூறப்படுகிறது. அந்த தகவல் சத்தியானந்தம் கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்டு கோபமான சத்தியானந்தம் ஜூலை 9 ஆம் தேதி இரவு 9 மணியளவில் குடியாத்தம் சித்தூர் பஸ்கேட் அருகில் ரவியிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டுள்ளனர். ஒருக்கட்டத்தில் வார்த்தை தடித்து இருவரும் சாலையிலேயே அடித்துக்கொண்டுள்ளனர். திமுகவின் மிக முக்கிய பிரமுகர்கள் இருவரும் நடுரோட்டில் அடித்துக்கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அடித்துக் கொண்ட இருவரையும் அவர்களுடன் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர். இருவரும் கோபத்துடன் கிளம்பி சென்றுள்ளனர். கல்லூர்.ரவி இதுப்பற்றி சத்தியானந்தம், துரைமுருகனிடமும், நந்தகுமாரிடமும் தெரிவித்துள்ளார்கள். தேர்தல் நேரம் என்பதால் விவகாரத்தை பெருசுப்படுத்தாதிங்க, தேர்தல் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் என சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.