தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டது. வடமாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. 5 அடி உயரத்துக்கு தண்ணீர் சாலைகளில் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர், ஆற்காடு பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று பகல் 11.15 மணி முதல் 11: 40 மணிக்குள் பலத்த சத்தமும் பூமி அதிர்வும் இருந்ததாக பல்வேறு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வாணியம்பாடி அடுத்த கபூராபாத், வேப்பம்பட்டு, ஜனதாபுரம், கொடையாஞ்சி, அம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நில அதிர்வின் போது சத்தம் வராது என சிலர் பேச என்னவோ, ஏதோ என மக்கள் அச்சத்துடன் கருத்துக்களை பரிமாரிக்கொண்டு உள்ளனர்.
மக்களின் அச்சத்தால் நில அதிர்வா அல்லது வேறு ஏதாவதா என வருவாய்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.