Skip to main content

தேர்தல் களத்துக்கு வந்த ஜக்கம்மா..., மக்கா ஃபோன்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் களம் கோடைக்கால வெப்பத்தை போலவே தினம் தினம் அதிகரித்து வருகிறது. திமுக, அதிமுக இரு தரப்பினரும் தொகுதிகளில் வலம் வந்து மக்களை சந்தித்தபடியே இருக்கிறார்கள். ஆளும்கட்சியான அதிமுகவுக்கு முன்பே திமுக தேர்தல் களத்தில் வேகம் காட்டி முன்னிலை வகிக்கிறது.


ஜீலை 23ந்தேதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பணியில் சுறுசுறுப்பை காட்ட துவங்கியுள்ளனர். ஒற்றை தொகுதியில் தேர்தல் நடைபெறும் போது விதவிதமாக தங்கள் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வார்கள் தொண்டர்கள்.

 

k


அப்படியொரு வித்தியாசமான பிரச்சாரத்தை தான் திமுகவினர் கையில் எடுத்துள்ளனர். திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், தேர்தல் பிரச்சாரத்துக்காக வேலூர் தொகுதிக்கு வந்துள்ளார். அவர் தினமும் ஒரு ஊருக்கு செல்கிறார். மக்கள் கூடும் இடங்களில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து, ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா… உதயசூரியனுக்கு ஓட்டுப்போடச்சொல்றா. திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் இந்த ஊருக்காரர்ன்னு சொல்றா… திமுக வேட்பாளர் நல்லது செய்வார்ன்னு சொல்றா என குடுகுடுப்பையை அடித்தபடி ஓட்டு வேட்டையாடுகிறார். கடந்த ஜீலை 21ந்தேதி வேலூர் பேருந்து நிலையத்திலும், 23ந்தேதி ஆம்பூர் பேருந்து நிலையத்திலும் பேருந்துகளில் ஏறி வாக்குகேட்டார். இந்த வித்தியாசமான வாக்குகேட்பை பொதுமக்கள் ரசிக்க போட்டிக்கு மற்ற நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர்.

 

k


அதன்படி, ஆம்பூர் தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் வடக்கு, தருமபுரி மாவட்ட கட்சியினர். அதில் ஒருசிலர் ’மக்கா போன்’ என்கிற பழைய கூம்பு வடிவு ரேடியோ போன்றதை உருவாக்கி அதன் மூலம் திமுகவுக்கு ஜீலை 23ந்தேதி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் இந்த வகையில் பிரச்சாரம் செய்தனர். மக்கா போன் மூலம் பேசும்போது அதன் சத்தம் 50 அடி தூரத்தில் இருப்பவருக்கு கேட்கும் என்பது குறிப்பிடதக்கது.


வாகனங்களில் மைக் கட்டியும், தெருமுனை கூட்டம் போட்டு வாக்குகேட்டால் தேர்தல் செலவின கணக்கில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் எழுதிவிடுவதால் இதுப்போன்ற செலவில்லாத வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்கிறார்கள்.


இதற்கு போட்டியாக வித்தியாசமாக என்ன செய்யலாம் என திமுகவின் மற்ற மாவட்டத்தினரும், தங்கள் வேட்பாளருக்கு இதைவிட வித்தியாசமாக வாக்குகேட்பது எப்படி என அதிமுக பிரமுகர்களும் யோசித்து வருகின்றனர் என்பது தான் குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்