சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது தொடர்பான வாதம் உருவாகியிருந்த நிலையில், ''மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதில் ஒன்றும் தவறில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே அப்படிதான் உள்ளது. இது ஏதோ நாங்கள் கண்டுபிடித்த சொல் அல்ல. நாங்கள் மட்டும் இப்படி சொல்லவில்லை ஏற்கனவே கலைஞர், அண்ணா ஆகியோர் கூறிய வார்த்தைதான் இது. எனவே இது தொடரும்'' என சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு என அழைப்பது தொடர்பான பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் கேள்விக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இதற்கு எதிர்பதமாக பாஜக சார்பில் 'கொங்குநாடு' என்ற பரபரப்புரை தொடங்கி, அந்த சர்ச்சையும் ஓய்ந்து முடிந்தது. இந்நிலையில், இன்று (18.08.2021) கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏவான வானதி சீனிவாசன், ''சமீப காலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் போக்கைப் பார்க்கிறேன். ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதன் வாசனை மாறாது. ரோஸ் ரோஸுதான். அதேபோல் மத்திய அரசை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.