தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு அனைவரும் தடுப்பூசி போடவேண்டும், பொதுமக்களுக்கு பெரியளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி போடாதவர்களை போட வைக்க வேண்டும் என அனைத்து துறைகளின் சார்பில் ஒவ்வொரு துறைக்கும் பணிகள் பிரித்து ஒதுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் போட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து துறைகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டன. இதில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டது. சிறப்பு முகாம் நடைபெறும் நாளன்று கார், ஆட்டோ, பேருந்து என இலகுரக, கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் கூறியிருந்தார்.
திருவண்ணாமலை நகரத்துக்குள் வரும் 9 சாலைகளில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள் பிரித்து அனுப்பி வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களிடம் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதா என விசாரிக்க வேண்டும், போடவில்லையெனில் அவர்களை அருகில் உள்ள சிறப்பு முகாமிற்கு அனுப்பி தடுப்பூசி போட வைக்க வேண்டும் எனச் சொல்லி அனுப்பினர். திருவண்ணாமலை டூ அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமிற்கு அருகில் வாகனங்களை நிறுத்தி தடுப்பூசி விழிப்புணர்வுக்கு அனுப்பப்பட்ட அலுவலர் தனக்கு உதவியாக ட்ரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்களை வரவழைத்துள்ளார். எட்டுக்கும் மேற்பட்ட டிரைவிங் ஸ்கூல் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டது. அந்த அலுவலர் காரில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டுள்ளார்.
டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்கள் நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி, ஏன் மாஸ்க் ஒழுங்கா போடல? தடுப்பூசி ஏன் போடல? போட்டியா எங்க சர்டிபிகேட் காட்டு என ஒருமையில் மிரட்டியுள்ளனர். எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களின் வண்டி சாவிகளை பூட்டி கையில் எடுத்துக்கொண்டு போய் அய்யாவ பாரு என மரியாதை இல்லாமல் பேசியுள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மாஸ்க் சரியாக போடவில்லையென வண்டியை ஆப் பண்ணுடா, உன் முதலாளியை போன் செய்யச் சொல்லு, அப்பறம்தான் பஸ்ச விடுவோம் என மிரட்டத்துவங்கினர். அரசியல் பிரமுகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை வெளியூரை சேர்ந்த டிரைவிங் ஸ்கூல் பணியாளர் நிறுத்தி வம்பாக கேள்வி எழுப்ப மற்றொரு டிரைவிங் ஸ்கூல் ஓனர் பார்த்துவிட்டு நீங்க போங்க சார் அனுப்பியுள்ளார். தினசரி பத்திரிகைத்துறை போட்டோகிராபர் ஒருவரிடமும் தகராறு செய்து அவரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டுள்ளனர்.
நல்லா டிப்டாப்பாக இருந்ததால் அவுங்க அதிகாரிகள் என்றே மக்கள் அனைவரும் நினைச்சாங்க. வண்டியை நிறுத்தி ஒருமையில பேசனவனுங்க டிரைவிங் ஸ்கூல் ஆளுங்கன்னு தெரிஞ்சிருந்தா விவகாரம் வேறமாதிரியாகியிருக்கும். அதிகாரிகள் நிறுத்தி கேள்வி கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை. சம்மந்தம்மேயில்லாத டிரைவிங் ஸ்கூல் நடத்தறவங்க வாகனங்களை நிறுத்தி அவமரியாதையா பேசனதைத்தான் ஏத்துக்க முடியலை. ஏய், நீ ஏன் சரியா மாஸ்க் போடல? போய் ஓரமா நில்லுன்னு மக்கள்கிட்ட அதிகாரம் செய்து ஏதோ இவுங்க ஆர்.டீ.ஓ, இன்ஸ்பெக்டர் மாதிரி நடந்துக்கிட்டாங்க. குடும்பத்தோட வந்தவர்களையும் மிரட்டினாங்க. இவுங்களுக்கு யாருங்க இந்த அதிகாரத்தை தந்தது? யார் வேண்டுமானாலும் பொதுமக்களை மிரட்டலாமா? என நம்மிடம் குமுறினார்கள் பாதிக்கப்பட்ட சிலர்.
நமக்கு தகவல் வந்ததும் நாம் நேரடியாக சென்று பார்த்தபோது, டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்கள் அதிகாரிகள் போலவே நடந்துக்கொண்டு மக்களிடம் ஒருமையில் பேசிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. நாம் இதுகுறித்து திருவண்ணாமலை ஆர்.டீ.ஓவை தொடர்புக்கொண்டு பேசியதும், ஆட்கள் பற்றாக்குறை, அதனால் சிலரை துணைக்கு வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தச்சொன்னேன். இப்படி நடப்பார்கள் எனத்தெரியாது, வேறு எங்கும் இப்படி பிரச்சனையாகவில்லை. இங்கு மக்களிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது, நான் உடனடியாக விசாரிக்கிறேன் என்றார். சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து காலி செய்துக்கொண்டு சென்றனர்.