சேலம் மாநகராட்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 28) நடந்தது. ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய பணிகள், வழிமுறைகள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளுதல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பறக்கும் படை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தபால் வாக்குகளைப் பெறுவதற்கான படிவங்களை அனுப்பி வைத்தல், வரப்பெற்ற தபால்களை முறைப்படுத்தி பராமரித்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் தொடர்பான பயிற்சிகள், கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அனைத்து நிலை அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.