தமிழகத்தில் இன்னும் பல பகுதிகளில் உள்ள பள்ளிகள், கோவில்களில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 வது ஆண்டு நிகழ்வு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், ''தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் பள்ளிகள், கோவில்கள் போன்ற பொது இடங்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்ற கொடுமை அரங்கேறி வருகிறது. பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர் தண்டிக்கப்படாமல் தப்பி விடுகின்றனர். இதுவே பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதற்கான காரணம்'' என்று தெரிவித்தார்.
அண்மையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு 2022-ல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசுகையில் ''திருக்குறள் வாழ்க்கை நெறிமுறையை கற்பிப்பதை மட்டுமே கூறுகிறார்கள். ஆனால் திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் பற்றி யாருமே கூறுவதில்லை. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்துள்ளார்'' என பேசியிருந்ததது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.