18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகள் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 216 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதே போன்று தமிழகத்தில் தமிழகத்தில் திமுக 26 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் சில வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு தாமதம், வாக்குப்பதிவு இயந்திர அறையின் சாவி தொலைந்து போனது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்மில் டபுள் லாக் திறக்க முடியாமல் திணறினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.