திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரமலை வனப்பகுதியில் ராணுவப் படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியும் ராக்கெட் லாஞ்சர்கள் சோதனை செய்யும் பயிற்சியும் நடப்பது வழக்கம். இந்தப் பயிற்சியின்போது சில ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காமல் வனப் பகுதிகளுக்குள் சென்று விழுவதால், வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தில் பொதுமக்கள் சற்று பீதியுடன் வாழ்ந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பயிற்சியின்போது இரண்டு லாஞ்சர் குண்டுகள் காணாமல் போனது. தற்போது அதைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த மாதம் 25ஆம் தேதி திருச்சி வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மூலம் 8 ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை வனப்பகுதியில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர். தற்போது அந்த ராக்கெட் லாஞ்சர்களை செயலிழக்க நீதிமன்ற அனுமதியோடு 12வது பட்டாலியன் ராணுவ வீரர்கள் 7 பேர் கொண்ட குழு மூடப்பட்ட குழியை மீண்டும் தோண்டி 8 ராக்கெட் லாஞ்சர்களையும் செயலிழக்க செய்துள்ளனர்.