தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் நகரின் என்.ஜி.ஒ. காலனி அருகே ஒரு தனியார் கேஸ் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. அதன் குடோன் சங்குபட்டி சாலையில் உள்ளது. அதன் மேலாளரான வைகுண்டம் (70) என்பவர் சிலிண்டர்கள் வைக்கிற குடோன் அருகே சிறிய அறையில் சமையல் செய்து கொண்டு கம்பெனி வேலையைக் கவனித்து வருபவர்.
அந்தக் கம்பெனியில் தாழையூத்து நகரின் காளி (36) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். சுரண்டை நகரின் வீரணாபுரத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் சிலிண்டர் சப்ளையராக வேலை பார்ப்பவர்.
இந்த நிலையில், கடந்த 23ம் தேதியன்று கம்மாப்பட்டி பகுதியின் கஸ்டமர் மாரியம்மாள் என்பவருக்கு சப்ளை செய்த சிலிண்டரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக அங்த சிலிண்டர் கொண்டு வரப்பட்டு அதனை மூன்று பேர்களும் குடோன் பக்கமுள்ள அறையில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தசமயம், வைகுண்டம் தங்கியிருந்த அறையில் சமையல் பணியும் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில் சிலிண்டரை சரி செய்யும் போது வெளியான கேஸ் சமையலறையிலும் பரவியதால் திடீரென தீப்பற்றிக்கொண்டது. அதில் சிக்கிய மூன்று பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அருகிலுள்ளவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி வைகுண்டம், காளி இருவரும் நேற்று காலை உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்பு அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியாக உள்ள அறையில் வைத்து சிலிண்டரை சீர் செய்ததால், அருகிலுள்ள சிலிண்டர் குடோன் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறது.