நெல்லை மாவட்டத்தின் பணகுடி பக்கமுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த குழந்தை துரையின் மகன் ஜெபசிங் (27). இவர், நேற்று முன்தினம் தூத்துக்குடியின் தபால்தந்தி காலனியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். பின்னர் அங்குள்ள தனது நண்பர்களான திரு.வி.க. நகரின் சண்முக சுந்தரம் மகன் மாரிமுத்து (23) பசும்பொன் நகரின் காளிப்பாண்டி மகன் மாரிமுத்து (23) 2 பேரையும் சந்தித்திருக்கிறார்.
திருமண வரவேற்பு முடிந்து இரவு 10 மணியளவில் நண்பர்கள் 3 பேரும் தூத்துக்குடி 3ம் மைல் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியின் துறைமுக ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் போதை உச்சிக்குப் போனதில் தன்னிலை மறந்து 3 பேரும் ரயில்வே தண்டவாளத்திலே படுத்து தூங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில் நேற்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திர மாநிலத்தின் நூஸ்வித் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேரின் மீதும் மோதியது. இதில் தண்டவாளத்தின் குறுக்காக படுத்திருந்த மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரயில்வே ட்ராக்கின் நீளவாட்டில் படுத்து தூங்கிய ஜெபசிங் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் நண்பர்கள் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த ரயில்வே போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர்கள், தொடர்ந்து படுகாயமடைந்த ஜெபசிங்கிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.