தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ரவுடிகளை ஒடுக்க அவர்களின் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கடந்த இரண்டு நாட்களில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் திருச்சி மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி, ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ள ரவுடிகள், பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் ரவுடிகள் உள்ளிட்டோரை கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி திருச்சியில் மட்டும் கடந்த ஆறு நாட்களில் 152 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிற ரவுடிகளையும் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கீழத்தெரு பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட பார்த்தசாரதி (26), அருண்குமார் (24), யோகேஷ் (27), மனோஜ்குமார் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கோபி (32), சங்கர் (26) ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.