சேலத்தில் கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய நண்பரான சேலம் சீலநாயக்கன்பட்டி கே.ஆர்.நகரைச் சேர்ந்த சதீஸ் என்கிற சதீஸ்குமார் (42) கள்ளச் சந்தையில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்தார்.
கடந்த பிப். 23 ஆம் தேதி, கோவிந்தராஜிடம் ஒரு வெள்ளைத்தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் என்று கூறி சில எண்களை எழுதிக் கொடுத்துள்ளார் சதீஸ்குமார். அந்த எண்களுக்குப் பரிசு விழும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த வேறு இருவர், தங்களுக்கு குறித்துக் கொடுத்த எண்களுக்குப் பரிசுத்தொகை விழவில்லை என்று கூறி, சதீஸ்குமாரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார் கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சதீஸ்குமாரை, அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கடந்த 12 ஆண்டுகளில் இதுபோல லாட்டரியில் அதிக பரிசுத்தொகை கிடைக்கும் என்று கூறி பலரை மோசடி செய்திருப்பதும், இது தொடர்பாக அவர் மீது அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் மட்டும் 25 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இந்த வழக்குகளில் பலமுறை அவர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்த பிறகு, மீண்டும் மீண்டும் பலரையும் லாட்டரி வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதையே தொழிலாக இருந்து வந்துள்ளார்.
இவரைப் போலவே, சேலம் மாவட்டம் ஓமலூர் தேக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் கருப்பூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், ஒரு துண்டு தாளில் சில எண்களைக் குறிப்பிட்டு, அது லாட்டரி சீட்டுகளின் எண்கள் என்றும், கட்டாயம் பரிசு விழும் என்று கூறியும் பணம் பறித்துள்ளார்.
ஆனால் சொன்னபடி அந்த எண்களுக்குப் பரிசு விழாததால் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் ராஜேந்திரன். அப்போது அவரை மாரியப்பன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாரியப்பன், தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் கருப்பூர் காவல் நிலையத்தில் 14 லாட்டரி மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து பொய் வாக்குறுதிகள் மூலம் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஸ்குமார், மாரியப்பன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் சந்திரசேகரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார், மார்ச் 8 ஆம் தேதி உத்தரவிட்டார். இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான கைது ஆணை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேரில் வழங்கப்பட்டது.
இவர்களில் சதீஸ்குமார் ஏற்கனவே 2014, 2016, 2018 ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 4வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.