இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மோர்குளம் வடக்குத்தெருவைச் சேர்ந்த அல்அமீன்- ஜாஸ்மின் ஜெமினா தம்பதியர். இவர் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டி பின்புறமுள்ள கதவை உடைத்து திருடர்கள் இருவர் உள்ளே புகுந்துள்ளனர். அதன் பின்னர் ஜாஸ்மின் ஜெமினா கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் செயினைப் பறித்துள்ளனர். அப்பொழுது அந்தப் பெண்மணி விழித்துக் கொண்டு அவர்களுடன் சண்டையிட்டுள்ளார்.
அங்கு கிடந்த பாத்திரத்தை எடுத்து திருடர்கள் மேல் வீசியதில் அவர்களது செல்போன் கீழே விழுந்தது. அப்பெண்மணி கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் வர திருடர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். உடனடியாக கீழக்கரை காவல்துறைக்குப் புகார் அளித்தனர். கீழக்கரை டி.எஸ்.பி சுபாஷ் உத்தரவின் பேரில் உடனடியாக அங்கு வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து அவர்கள் அங்கு விட்டுச் சென்ற செல்போனை ஆய்வு செய்தனர். அதில் சிவகங்கையைச் சேர்ந்த வாசுதேவன் மற்றும் பால்பாண்டி ஆகிய இருவரையும் சிவகங்கையில் வைத்து கீழக்கரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து கீழக்கரை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், "நாங்கள் பகலில் கிராமங்களில் கட்டிடவேலை மற்றும் கூலி வேலை செய்து கொண்டே அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிடுவோம். ஆண்கள் இல்லாத வீடுகளாகப் பார்த்து அந்த வீடுகளில் கிடைக்கின்ற பொருட்களை எடுத்து கொண்டு சென்றுவிடுவோம். எங்களது செல்போனால் இப்பொழுது நாங்கள் மாட்டிக்கொண்டோம்" என்றனர். இதனால் வீடுகளில் தனியாக இருப்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.