
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூதனப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் நாளைய தலைமுறைக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், இன்றே உணவுப் பொருட்களை ஸ்டேட் பேங்க்கில் டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று மாவட்டச் செயலாளர் அகமது தலைமையில், நிர்வாகிகள் காய், கனி, தேங்காய் மாலை, நாற்றுகள், ஏர்கலப்பைகளுடன் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர். நூதன முறையில் பேரணியாக வங்கி நோக்கிச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினார்கள்.
இது குறித்து மாவட்டச் செயலாளர் அகமது கூறும் போது, இந்திய விவசாயத்தை முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் குழிதோண்டிப் புதைப்பதற்குத்தான் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்பது பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள்களை, சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
இதுவரை, உணவுப்பொருள்களைப் பதுக்கிவைக்க முடியாத நிலை இருந்தது. இந்தப் புதிய சட்டம், எவ்வளவு உணவுப்பொருள்களை வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம், எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம் என்பதை அனுமதிக்கிறது. அதைப் பயன்படுத்தி, செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, எவ்வளவு வேண்டுமானாலும் விலையை உயர்த்தி விற்பார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஏழை எளிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிடும்.
இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால், `ஒப்பந்தச் சாகுபடி’ என்ற பெயரில் இந்திய விவசாய நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. வேளாண் விளைபொருள்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனத்தினர் முன்கூட்டியே தீர்மானிப்பார்கள். `இது நல்லதுதானே...’ என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விலையை நிர்ணயிக்கும் நிறுவனங்கள், விளைபொருள்களின் தரம் குறித்து ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிப்பார்கள். `அந்த நிபந்தனைகளின்படி விளைபொருள்கள் இல்லை’ என்று சொல்லி, தீர்மானிக்கப்பட்ட விலையைத் தர மறுக்கும் நிலைதான் உருவாகும். மேலும், இந்திய மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வது என்பதற்கு பதிலாக, ஏற்றுமதிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வது என்ற நிலை ஏற்படும்.
நிலம் மட்டும் விவசாயிகளின் பெயர்களில் இருக்கும். மற்ற அனைத்தையும் இதன் மூலம், விதைத்தது எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சொந்தமாக இருக்கும். இந்திய விவசாயிகளை மத்திய அரசு கைகழுவிவிடுகிறது.
`ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்திய விவசாயிகளில் 86 சதவிகிதம் பேர் சிறு, குறு விவசாயிகள். இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கு, அவர்கள் வசிக்கும் தாலுகாவைத் தாண்டி வர மாட்டார்கள். எனவே, இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அது வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் சாதகமாக இருக்கும்.

`ஒரே நாடு ஒரே சந்தை’ என்பது ஒரு வெற்று முழக்கம். சட்டங்களைத் திரும்பப் பெற அழுத்தம் கொடுக்க வேண்டிய மாநில அரசு ஆதரவு கரம் நீட்டியிருப்பது சொந்த மாநில மக்களையே வஞ்சிப்பதாக உள்ளது. விவசாயிகளை வஞ்சித்து அழிக்கும் சட்டத்திற்கு ஆதரவு கரம் உயர்த்திய அ.தி.மு.க எம்.பி ரவீந்திநாத் பதவி விலக வேண்டும். சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் பெரிய போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.