விழுப்புரத்தை சேர்ந்த 15வயது பள்ளி மாணவி ஒருவர் கரோனா காரணமாக பள்ளிகள் திறக்காததால் எல்லா மாணவ மாணவிகளையும் போல இந்த மாணவியும் பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை இணையவழி மூலம் படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்ட காரணத்தால் அவரது பாட்டியுடன் அவரது வீட்டில் தங்கி இருந்துள்ளார். தனிமையில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் தினசரி தொடர்ந்து படித்து வந்தவர் மன சோர்வுக்கு ஆளாகிய மாணவிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார்.
இதையடுத்து வெளியூரிலிருந்து வந்த அவரது பெற்றோர்கள் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர் அவரது வயிற்றில் ஒரு கட்டி போன்று ஒன்று இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்துள்ளார். அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுமாறு அவரது பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த மாணவியின் வயிற்றில் இருந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது. அப்படி வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட அந்த கட்டி போன்ற உருவம் முழுவதும் தலைமுடிகள் சிறிய உருண்டை வடிவில் இருந்துள்ளது. தலைமுடியை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சாப்பிட்டதால் தான் வயிற்றில் கட்டி போன்று உருவாகியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர்கள் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெற வைத்துள்ளனர்.
தற்போது மனநல மருத்துவரிடம் தொடர்ந்து மனநல ஆலோசனை பெற்று வருகிறார். அந்த மாணவி நிலையை அறிந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று முன்தினம் அந்த மாணவியின் நிலை குறித்து விளக்கம் அளிக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் சிறுமிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள் அவருக்கான சிகிச்சைகள் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அந்த மாணவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டது எப்படி என்பது போன்ற அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணையவழி மூலம் தொடர்ந்து கல்வி படித்ததால் மாணவி மனநிலை பாதிக்கப்பட்டு தலைமுடியை பிய்த்து தானே சாப்பிட்டாரா அல்லது ஏற்கனவே மாணவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததா? இது தற்காலிகமாக ஏற்பட்டதா? என்பது குறித்து புதிய விசாரணை நடத்திவருகிறார்கள் அதிகாரிகள்.