அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து டிரைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீரமங்கலம் வெட்டாறு பாலம் அருகே வந்த இரண்டு லாரிகள் தார்பாயால் மூடப்பட்ட நிலையில் வந்ததை நிறுத்தி விசாரனை மேற்கொண்டனர். லாரிகளில் அரசின் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றப்பட்டு சிமென்ட் மூட்டை ஏற்றி செல்வது போல் தார்பாயால் மூடப்பட்டு மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. வலங்கைமான் எஸ்ஐ சிவக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் மணல் லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.
லாரி டிரைவர்களான நாமக்கல் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் சேலம் பகுதியைச் சேர்ந்த மாதேசன் அகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து வலங்கைமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மன்னார்குடி சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி செயல்பட்டுவருகிறது. அவர்கள் சவுடு மண்ணுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு மணலாக விற்பனை செய்கின்றனர். இது அரசு அதிகாரிகள், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடக்கிறது. அப்படி வந்த லாரிகள் தான் இது " என்கிறார்கள் சில காக்கிகள்.
தண்ணீர் திறக்க கோரி நாகை விவசாயிகள் சாலைமறியல்
அனைக்கரை கீழனையில் இருந்து பிரிந்து வரும் கும்கி மண்ணி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் திருச்சிற்றம்பல்லம், கடலங்குடி, பூதங்குடி, ஆத்தூர் கேசிங்கன், புத்தமங்கலம், காவளமேடு, நமச்சிவாயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் கும்கி மண்ணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை கும்கி மண்ணிஆறு மற்றும் மண்ணியாறுகளில் தண்ணீர் வரவில்லை பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மின்மோட்டார் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்ய முடியாமல் கிடக்கிறது. அதோடு குடிநீருக்கான நிலத்தடி நீரும் உயரவில்லை. இவ்வளவு மழையிலும் ஆற்றில் தண்ணீர் வரவில்லை.
இந்நிலையில் நேற்று பாசனத்திற்கு கும்கி மண்ணி மற்றும் மண்ணியாற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். கொள்ளிம் ஆற்றில் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய மணல்குவாரி திறக்க பாதை அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்களும் விவசாயிகளும் கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை தாசில்தார் காந்திமதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம் சீர்காழி செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
க.செல்வகுமார்